Wednesday, December 5, 2012

புகைப்பழக்கம் மூளையையும் மழுங்கடிக்கிறது: புதிய ஆய்வு




புகைப்பழக்கம் உடல் நலத்தை பாதிப்பதோடு அறிவு நலத்தையும் கெடுப்பதாக புதிய ஆய்வுகள் காட்டுகின்றன.



நினைவாற்றலையும், பகுத்தாயும் ஆற்றலையும், கல்வி ஆற்றலையும் சேதப்படுத்துவதன் மூலம் புகைப்பழக்கம் மூளையை "அழுகச் செய்கிறது" என லண்டன் கிங்ஸ் காலெஜை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அளவுக்கதிகமான உடல் எடையும் இரத்த அழுத்தமும்கூட மூளையைப் பாதிக்கின்றன; ஆனால் அவை புகைப்பழக்கம் அளவுக்கு இல்லை என்று 8,800 பேரிடம் நடத்தப்பட்டுள்ள இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
நமது பழக்க வழக்கங்கள் நமது உடல் ஆற்றலை எவ்வாறு பாதிக்கின்றனவோ அதேபோல நமது சிந்தனை ஆற்றல்களையும் பாதிக்கின்றன என்பதை மக்கள் உணர வேண்டும் என இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட விஞ்ஞானி ஒருவர் தெரிவிக்கிறார்.

ஏஜ் அண்ட் ஏஜிங் என்ற மருத்துவ சஞ்சிகையில் இவர்களது ஆய்வின் முடிவுகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

மாரடைப்பு, மூளையில் ரத்தக் கசிவு போன்ற நோய்களுக்கும் மூளையின் ஆரோக்கியத்துக்கும் இடையில் தொடர்பு இருக்கிறதா என்பதை கிங்ஸ் காலேஜ் விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்.

ஆய்வு முறை

ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் பலரின் உடல் ஆரோக்கியம், பழக்க வழங்க்கங்கள் ஆகியவற்றையும் அவர்களுடைய மூளையின் ஆரோக்கியத்தையும் ஒரே நேரத்தில் ஆய்வாளர்கள் பரிசோதித்தனர்.
புதிய வார்த்தைகளையோ கற்றுக்கொள்கிறார்களா என்பதற்கான பரிசோதனை, ஒரு நிமிடத்தில் எத்தனை பெயர்களை, எத்தனை விலங்குகளின் பெயர்களை சொல்லமுடிகிறது என்ற பரிசோதனை போன்றவற்றின் மூலம் இவர்களுடைய மூளையின் ஆரோக்கியம் பரிசோதிக்கப்பட்டது.

எட்டு ஆண்டுகள் கழித்து இதே நபர்களிடம் இதே உடல் மற்றும் மூளை பரிசோதனைகள் மீண்டும் நடத்தப்பட்டு முடிவுகள் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டன.

மூளையின் ஆரோக்கியம் குன்றிப்போனவர்களிடையே மாரடைப்பு
அபாயமும், மூளையில் ரத்தக் கசிவு அபாயமும் அதிகமாக உள்ளது என முடிவுகள் காட்டியிருக்கின்றன.

தவிர மூளை ஆற்றல் பரிசோதனைகளில் ஒருவர் குறைந்த புள்ளிகள் வாங்குவதற்கும் புகைப்பழக்கத்துக்கும் இடையில் தொடர்பு இருக்கிறது என்பதையும் இந்தப் பரிசோதனைகள் காட்டியுள்ளன.

No comments:

Post a Comment