Thursday, November 29, 2012

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்-திரைப்படம்


இந்தியாவின் தனித்தன்மை என்று பார்ப்பனர்களால் பெருமையாகவும், சமூக விஞ்ஞானிகளால் பெருங்கொடுமையாகவும், அநீதியாகவும் சுட்டிக் காட்டப்படுவது தான் வர்ணாஸ்ரமத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட ஜாதிமுறை. புத்தர் தொடங்கி இன்றைய காலம் வரை வர்ணாஸ்ரமத்திற்கும், ஜாதிக்கும் எதிரான போராட்டம் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டத்தின் பக்கங்களில் இவரின் பங்களிப்பு ஒரு புரட்சியின் வீச்சு. ஆரிய சனாதனத்தையும், அது அமர்ந்திருந்த அதிகாரப் பீடத்தையும் ஆட்டம் காணச் செய்த பேரிடி!  அடிமை வாழ்வைத் தகர்க்க, அரசியல் அதிகாரத்தைப் பெற வேண்டியதன் அவசியத்தை இந்திய மண் எங்கும் பரப்பிய பெரு நெருப்பு!
 
 
மாபெரும் திறமைசாலிகள் என பூணூல் படர்ந்த தங்கள் முதுகைத் தாங்களே தட்டிக் கொள்ளும் பார்ப்பனக் கூட்டத்திற்கிடையில், தன் தனிப்பெரும் ஆற்றலால் இந்திய அரசியல் சாசனத்தை வடித்த சிற்பி! ஓரளவுக்கேனும் மனித உரிமைக்கும், கருத்துரிமைக்கும் இந்திய அரசியல் சட்டம் வாய்ப்புத் தருகிறதெனில் அது அவரின் பங்களிப்பால் மட்டுமே சாத்தியமாயிற்று! தானே வடித்த அரசியல் சட்டமாயினும், அது சரியாகச் செயல்படுவதும், தவறாகப் பயன்படுவதும் ஆள்வோரின் கைகளில் தான் இருக்கிறது என்பதை நேர்மையின் உறுதியோடு அறிவித்தவர்! ஆளும் பார்ப்பனியக் கும்பலால் அதே சட்டம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கெதிரானதாக மாறும் போது அதைக் கொளுத்துவதிலும் முதல் ஆளாய் நான்தான் இருப்பேன் என்று அவர் அறிவித்த போதும் அதே அரிமாவின் கர்ச்சனை! நினைத்ததைச் செய்ய முடியாத போது இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் என்ற பெருமையையும் உதறி எழுந்து, மக்களையும் தட்டி எழுப்பிய கதிரவன்! அவர் தான் ”வடநாட்டுப் பெரியார்” என்று வரலாற்றால் பெருமையோடு அழைக்கப்படும் அண்ணல் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்!
 

அம்பேத்கரின் புகைப்படத்தை மட்டும் காட்டி, அவரை தங்களில் ஒருவராக செரிக்கத் துடிக்கும் பார்ப்பன இந்துத்துவ சதிக்கு நடுவில், அம்பேத்கரின் போராட்ட வாழ்க்கையை எடுத்துச் சொல்லி, ஜாதிக்கெதிராகத் திரண்டெழுந்து அதை ஒழிக்க முரசு கொட்டி நின்ற அவரின் கொள்கைகளை இன்றைய தலைமுறைக்கு கொண்டுசெல்லக் கிடைத்த பேராயுதம் தான் ”அம்பேத்கர்” திரைப்படம். தேசிய திரைப்பட வளர்ச்சிக் குழுமத்தின் தயாரிப்பில் ஜபார் பட்டேலின் இயக்கத்தில் 2000-ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளிவந்த ”டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்” படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 2010 டிசம்பர் 03-ஆம் தேதி வெளிவந்துள்ளது. அம்பேத்கர் (தமிழ்) திரைப்படத்தின் வெளியீடே ஒரு பெரும் போராட்டத்தின் பின்னான வெற்றியாகும். அவ்வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் நமது நன்றிகள் உரித்தாகும்.
 
படிப்பெல்லாம் உங்களுக்கு ஏறாது.. அறிவுக்கும் உங்களுக்கும் ஆயிரம் காதம் தொலைவு என்றும், சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் படிப்பைக் கொடுக்காதே என்றும் தீண்டப்படாத குலமாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த மக்களிலிருந்து கிளர்ந்தெழுந்த அறிவுக் கதிரவனாம் அம்பேத்கரின் படிப்பு, அறிவுத்தேடலுக்கான அமெரிக்க வாழ்க்கையோடு தொடங்குகிறது அம்பேத்கரின் வரலாறு. அதற்கு முந்தைய காட்சியிலும், ஓவியங்களின் வாயிலாகவும் ஜாதிக் கொடுமையால் மக்கள் பட்ட அவதியைத் தெளிவாகக் காட்டிவிட்டுத்தான் தொடங்குகிறது படம். படிப்பு முடிந்ததும் பரோடா அரசில் பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனையோடு கூடிய அவ்வரசின் நிதியுதவியில் பொருளாதாரத் துறையிலான தன் படிப்பையும், ஆய்வையும் மேற்கொண்டிருக்கும் அம்பேத்கரின் கடினமான உழைப்பையும், அறிவாற்றலையும் வியப்புடன் நோக்குகிறார்கள் உடன் பயில்வோரும், பேராசிரியர்களும். அங்கே கருப்பர்களுக்கெதிரான அநீதியைக் காணும் அம்பேத்கர், இந்தியாவில் ஜாதியின் பெயரால் இதனினும் கொடுமையான சூழல் இருப்பதைத் தனது ஆய்வுக் கட்டுரையொன்றில் மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார். 

இதற்கிடையில் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுக்குமாறும், அமெரிக்காவில் இருந்தபடி அதற்குக் குரல் கொடுக்குமாறும் மாணவர் அம்பேத்கரைத் தனிப்பட்ட முறையில் லாலா லஜபதி ராய் அழைக்கிறார்.  தன் படிப்பைக் காரணம் காட்டியும், இந்திய சுயராஜ்ஜியம் எவ்வளவு முக்கியமோ, அந்தப் போராட்டத்தை விடக் கடுமையான போராட்டத்தை ஜாதி ஒழிப்புக்கும், வர்ணாசிரம ஒழிப்புக்கும் நடத்த வேண்டும் என்ற தனது உணர்வாலும் ராயின் அழைப்பை மறுக்கிறார் அம்பேத்கர். 

அம்பேத்கரின் சிந்தனைப்போக்கு அங்கேயே தெள்ளெனத் தெரியத் தொடங்குகிறது. படிப்புக்கும், குடும்பத்துக்குமாக தொடர்ந்து நடக்கும் வாழ்க்கைப் போராட்டத்திற்கு மத்தியில் தனது இளமைக்காலத்தில் தானும், தன்னைச் சேர்ந்தவர்களும் பெற்ற அவமானமும், கொடுமைகளும் அம்பேத்கரின் மனதில் ஜாதிக்கும் தீண்டாமைக்கும் எதிரான போராட்டத்தின் தேவையை உணர்த்திக் கொண்டேயிருக்கிறது. உதவித் தொகை நின்று மீண்டும், இந்தியா திரும்பியதும், பரோடா அரசுப் பணியில் அவர் சந்திக்கும் சவால்களும், படித்த, அறிவுள்ள ஒருவனுக்குத் தாழ்த்தப்பட்ட ஜாதிக்காரன் என்ற ஒரே காரனத்தினால், இந்து மதத்தினராலும், பிற மதத்தினராலும் இழிவுபடுத்தப்பட்டு, வாழ்க்கையின் அத்தியாவசிய தேவைகளும் மறுக்கப்படுவதிலும், அவரது உறுதிப்பாடு பன்மடங்காகிறது.

பின்னர் சாகு மகராஜின் உதவியால் தன் மேற்படிப்பை வெற்றிகரமாக முடித்து, வழக்கறிஞராகவும், அதே நேரத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான உரிமைகளைப் பெறுவதற்கான போராட்டத்தில் பத்திரிகை தொடங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்துதல், போராட்டக் களம் அமைத்து, சட்ட ரீதியாகப் போராடுதல் என அவரின் பணி வேகமெடுக்கிறது. மகர் குளத்தில் அனைத்து மக்களும் குடிநீர் பருகலாம் என்ற அடிப்படை மனித உரிமைப் பிரச்சினையோடு அவர் மக்களைத் திரட்டிக் களம் இறங்குவதும், பின்னர் ஆலய நுழைவுப் போராட்டத்தில் ஈடுபடும் போது கூட, “ஆலய நுழைவை விட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசியல் அதிகாரத்தைப் பெறுவது தான் நமது முக்கிய நோக்கம்” என்று தெளிவாக அரசியல் ரீதியாகப் போராடுவதும் மிகச் சிறப்பாகப் படத்தில் விளக்கப்பட்டுள்ளது.
 
 
இந்தப் போராட்டங்களுக்கெல்லாம் காந்தியும் காங்கிரசும் செய்த துரோகங்களையும், வர்ணாசிரமத்தை ஆதரிக்கும் காந்தியின் மனோபாவத்தையும் துணிச்சலாகப் பதிவு செய்திருக்கிறது படம். தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனித் தொகுதி வழங்குவது என்ற அம்பேத்கரின் போராட்டத்தால் பிரிட்டிஷ் அரசு ஏற்படுத்தித் தந்த வாய்ப்பையும், உண்ணாவிரதம் என்ற பெயரில் சூழ்ச்சி செய்து காந்தியார் பறித்த துரோக வரலாற்றை படம் மிகத் தெளிவாகப் பதிவுசெய்திருக்கிறது. ஆனால் அந்த நேரத்தில் அம்பேத்கரின் உறுதிப்பாட்டை ஆதரித்தும், காந்தியின் சூழ்ச்சிக்குப் பலியாகிவிடக்கூடாது என்று வலியுறுத்தியும் ”காந்தியின் உயிரை விட, தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமையே மேலானது” என்று இந்தியாவிலேயே தனி மனிதராகக் குரல் கொடுத்து, அம்பேத்கருகுக் கரம்கொடுத்த தந்தை பெரியாரின் பங்களிப்பை படத்தில் நம்மால் காணமுடியவில்லை. அம்பேத்கர் தனி மனிதரல்ல.. அவருக்குப் பின்னால் மக்கள் மட்டுமல்ல... மாபெரும் படையின் தலைவராம் பெரியார் என்னும் பேருரு இருந்தது என்பதைப் பதிவு செய்தல் எவ்வளவு முக்கியமானது. அதை செய்யத் தவறியிருப்பது ஒரு வரலாற்றுப் பிழையே!
 
ஆயினும், அம்பேத்கரின் எழுத்துகளே பெரும்பாலும் வசன வடிவம் பெற்றுள்ளதால் ஒவ்வொரு வசனமும் ஆயிரம் முறை உரத்துச் சொல்ல வேண்டிய கருத்துடையனவாகும். திரைப்படம் எனும் போது முழு வாழ்க்கை வரலாற்றை மூன்று மணிநேரத்திற்குள் செறிவாகக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தை உணர்ந்து செயல்பட்டிருக்கிறார் இயக்குநர் ஜாபர் படேல். ”அடடா... அம்பேத்கர் இவர் தானோ!” என்று வியக்கும் வகையில் ஏற்ற கதாபாத்திரத்தை உணர்ந்து திறம்பட செய்திருக்கிறார் மம்முட்டி. அவரது தோரணைகளாலும், பார்வைக் கோணங்களாலும், சமூக அநீதியைக் கண்டு தெறிக்கும் விழிகளாலும் அப்பப்பா.... அம்பேத்கரை நேரில் பார்த்த உணர்வைப் பெற முடிகிறது.  கலை இயக்கம், ஒளிப்பதிவு எனத் தேர்ந்த கலைத் தன்மை கொண்டதாகவும், அம்பேத்கரின் மனைவி ரமாபாயின் கதாபாத்திரம் ஏற்ற சோனாலி குல்கர்னி, காந்தியின் சூழ்ச்சிப் பார்வையை மிகச் சரியாகப் பொருத்தி நடித்த நடிகர் என தேர்ந்த நடிகர்களாலும், பன்னாட்டுத் தரம் பொருந்தியதாக உள்ளது படம். தமிழ் மொழியாக்கமும் தெளிவாக இருக்கிறது. 

கடும் போராட்டத்திற்குப் பின்னும், விடாப்பிடியாக முயற்சித்து தமிழில் வெளிவரக் காரணமான என்.எப்.டி.சி-யின் சென்னை கிளை அதிகாரிகளைப் பாராட்ட வேண்டும். ஆனால் இதன் வெற்றி நம் கையில்தான் இருக்கிறது. தமிழகத்தின் பெருநகரங்களில் மட்டும், அதுவும் சொற்ப திரையரங்குகளில் பகல்காட்சியாக மட்டும் வெளிவந்திருக்கும் அம்பேத்கர் திரைப்படத்தை குடும்பம் குடும்பமாகச் சென்று பார்ப்பதும், முழுமையாக ஓடும் வகையில் அதனை வெற்றியடையச் செய்வதன் மூலமாகவும் நமது தலைமுறையில் ஓர் எழுச்சியை உருவாக்கவும், அடுத்த தலைமுறைக்கு புரட்சிச் சிந்தனையை விதைக்க வேண்டியது நமது கடமையாகும். அந்த வகையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இப்படத்தைக் காட்டச் செய்து அம்பேத்கரை அவர்களுக்கு அறிமுகப்படுத்துவது தமிழக அரசின் கடமையாகும். ஏற்கெனவே அம்பேத்கர் படத்தைத் தமிழில் மொழிமாற்றம் செய்வதற்கு ஊக்கத் தொகையாக ரூ.10 லட்சத்தை வழங்கி, அம்பேத்கர் மீதும் அவர் கொள்கைகள் மீதும் தனக்குள்ள ஆழ்ந்த பற்றை வெளிப்படுத்தியிருக்கும் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் மாணவர்களுக்குக் கொண்டு சேர்க்கும் பணியையும் திறம்படச் செய்து முடிப்பார் என்பதில் நமக்கு எள்ளளவும் அய்யமில்லை. 

No comments:

Post a Comment