வேலை செய்யும் உரிமை கேட்டு
வீதியிலிறங்கி போராட்டம் நடத்தும் பெண்களைப் படம் பிடித்துக்
கொண்டிருக்கிறது ஒரு கேமரா. அதன் முன்னர் வந்து சாம்பிராணி போடும் சிறுவன்
எஸ்பான்டி, அது எதற்கான கூட்டம் என்று சொல்லிவிட்டு அதற்கு ஈடாக பணம்
(டாலர்) பெறுகிறான். அவ்வழியே செல்லும் ஒரு தாயையும் மகளையும் வழிமறித்து
அவர்களுக்கும் சாம்பிராணி போட்டு பணம் கேட்கிறான். ஊர்வலம் கேமராவை
நெருங்குகிறது. தாலிபான்கள் துப்பாக்கிகளோடு வருகிறார்கள். தண்ணீர்
பீய்ச்சியடிக்கப்பட்டு கூட்டம் கலைக்கப்படுகிறது. தாயும் மகளும் ஓடி தங்கள்
வீட்டில் ஒளிகிறார்கள். கேமராவில் படம் பிடித்தவர் தாக்கப்படுகிறார்.
ஊர்வலத்தில் வந்த பெண்கள் சிலர் சிறையிலடைக்கப்படுகிறார்கள்.
அந்தத்
தாய் பணியாற்றும் மருத்துவமனைக்கு வரும் தாலிபான்கள் வெளிநாட்டுப் பெண்
யாரும் உள்ளே இருக்கிறார்களா எனச் சோதனை செய்கிறார்கள். தான் மருத்துவ உதவி
செய்து கொண்டிருக்கும் பெரியவரின் மகனைத் தன் கணவன் எனச் சொல்லி
தப்பிக்கிறாள் தாய். வெளியிலிருந்து வந்திருக்கும் என்னிடம் உன் மனைவி
பேசுகிறாள். அதைப் பார்த்துக் கொண்டு சும்மா நிற்கிறாயே. உனக்கு
வெட்கமாயில்லை என்று திட்டிவிட்டு செல்கிறான் அந்தத் தலிபான். வெளிநாட்டுப்
பெண் அந்த மருத்துவமனையில் சிக்கியதும் அதை மூட உத்தரவிடுகிறார்கள்.
அங்கிருந்த நோயாளிகள் அனைவரும் மருத்துவமனையைக் காலி செய்ய, பெரியவர்
மற்றும் அவரது மகனுடன் சேர்ந்து குளுக்கோஸ் பாட்டிலையும் அதன் தாங்கியையும்
(stand) தூக்கிக் கொண்டு செல்கிறார்கள் தாயும் மகளும்.
தங்களை
வீட்டில் விட்டு விட்டு வருமாறு வேண்டுகிறாள் தாய். அவன் அழைத்துச்
செல்கிறான். வழியில் தடுக்கும் தலிபான்கள் உன் மனைவியை வைத்து சைக்கிளில்
அழைத்துச் செல்கிறாயே மற்ற ஆண்களுக்கு ஆசை வராதா? பாதங்களை முழுமையாக
மூடிக் கொள்ளச் சொல் என்று மிரட்டி அனுப்புகிறார்கள்.
மறுநாளும்
என்னை இதுபோல் காப்பாற்றுவீர்களா? என்று அந்தத் தாய் கேட்டதும் அவன்
மறுத்துவிடுகிறான். மறுநாள் பெரியவருக்கு மருத்துவ ஊழியம் பார்க்க
வருகிறார்கள். பெரியவர் இறந்துவிட்டதால் கையில் கொஞ்சம் பணம் கொடுத்து
அனுப்பி விடுகிறான் பெரியவரின் மகன். குளுக்கோஸ் பாட்டிலையும் தாங்கியையும்
தூக்கிக் கொண்டு திரும்பி விடுகிறார்கள்.
பெண்கள் பணிக்குச் செல்லக்கூடாது என்று தலிபான் சட்டம் கடுமையாக
நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. கணவனை காபூல் போரிலும், சகோதரனை ரஷ்யப்
போரிலும் இழந்துவிட்டு புலம்பும் தாய்க்கு பாட்டி யோசனை சொல்கிறாள். 12
வயது மதிக்கத்தக்க பேத்தியை ஆண் பிள்ளையாக மாற்றி வேலைக்கு அனுப்பலாம்
என்கிறாள். தாலிபான்களுக்குத் தெரிந்தால் தன்னைக் கொன்று விடுவார்கள் என
மிரளும் பேத்திக்கு தைரியமூட்ட பழங்கதை ஒன்றையும் சொல்கிறாள் பாட்டி. கதை
கேட்டபடியே தூங்கிவிட, தூக்கத்திலேயே அவளது தலை முடி வெட்டப்படுகிறது.
காலை
எழுந்ததும் வெட்டப்பட்ட தன் தலை முடியைப் பார்க்கிறாள் சிறுமி. அவளிடம்
தாய், வெட்டப்பட்ட சடையைத் தர, அதை ஒரு தொட்டியில் இட்டு மண் நிரப்பி,
குளுக்கோஸ் பாட்டிலிருந்து சொட்டு சொட்டாய் நீர்விட்டு வளருமா என்று
பார்க்கிறாள் அவள்.
தலையில் குல்லாய் அணிவித்து, தன்
கணவருடன் பணியாற்றிய முன்னாள் இராணுவத்தவர் ஒருவரின் கடையில் வேலைக்குச்
சேர்த்து விடுகிறாள். சிறுமி சாலையில் செல்வதை பார்க்கும் தாலிபான்
ஒருவனுக்கு சந்தேகம் ஏற்பட்டு அவளைப் பின் தொடர்கிறான். சந்தேகப்படும் படி
நீ ஏன் நடந்து கொண்டாய் என தாய் கடிந்து கொள்கிறாள்.
மறுநாள்
ஊரிலுள்ள சிறுவர்களை யெல்லாம் தாலிபானின் முல்லாக்கள் வந்து இழுத்துச்
செல்கின்றனர். இந்தச் சிறுமியும் சிறுவனாகக் கருதப்பட்டு அழைத்துச்
செல்லப்படுகிறாள். அந்தக் கூட்டத்தில் தனக்குத் தெரிந்த சாம்பிராணிப் புகை
போடும் சிறுவனிடம் நம்மை எங்கே அழைத்துச் செல்கிறார்கள்? என்று கேட்கிறாள்.
ஒசாமாவின் படையில் நம்மை சேர்க்கப் போகிறார்கள் என்று சிறுவர்கள்
பேசிக்கொள்கிறார்கள். அனைவருக்கும் குர்-ஆன் பயிற்றுவிக்கப்படுகிறது.
பின்னர் அனைவரும் தங்கள் உடலை இஸ்லாமிய முறைப்படி சுத்தம் செய்து கொள்வது
எப்படி என்பதை ஒரு முல்லா விளக்குகிறார்.
முதலில் வலது பக்க
உடலில் தண்ணீரை ஊற்று! பின் இடப் பக்க உடலில்! பின் தலையில் என்று சொல்லிக்
கொண்டு, வருபவர் உங்களின் ஈரமான கனவுகளின் பின்னால் உடலை
சுத்தப்படுத்துவதை சொல்லித் தருகிறேன் என்று சொல்லிவிட்டு, துண்டை உடலில்
சுற்றிக் கொண்டு கட்டிவிடாமல் இழுத்துப் பிடித்துக் கொண்டு, மடியை எப்படி
சுத்தம் செய்வது என்று விளக்குகிறார். பின்னர் வெதுவெதுப்பான நீர் நிரம்பிய
அண்டாவில் அமர்ந்தபடி அனைத்துச் சிறுவர்களும் மேலாடையின்றி துண்டு
கட்டியபடி உடலைச் சுத்தம் செய்கிறார்கள். இதை ஒளிந்து கொண்டு பார்க்கும்
சிறுமியைக் கண்டுபிடித்து விடுகிறார் முல்லா.
அவளையும்
இதேபோல் செய்யச் சொல்ல, அவள் சின்ன தயக்கத்துடன் சட்டையைக் கழற்றிவிட்டு
தண்ணீருக்குள் செல்கிறாள். இவளிடம் பெண் தன்மை அதிகமிருக்கிறது என்கிறார்
அவர்.
மறுநாள் பையன்களெல்லாம் கூடி நின்று கிண்டல் செய்யும்
போது, அவளை அவர்களிடமிருந்து காக்கிறான் எஸ்பான்டி. அப்படியானால் அவள்
பெயர் என்ன? என்கிறார்கள். ஒசாமா என்கிறான் அவன்.
ஆனாலும்
ஓசாமாவின் மீது மாணவர்களுக்கு சந்தேகம் தீரவில்லை. மறுநாள் மேலும் தொல்லைப்
படுத்துகிறார்கள். நீ ஆணானால் இந்த மரத்தின் மேலேறிக் காட்டு என சவால்
விடுகிறார்கள். மரத்தில் வேகமாக ஏறிவிட்ட ஒசாமா. கீழே இறங்க பயப்படுகிறாள்.
எஸ்பான்டி அவளை இறக்கிவிடுகிறான். அவளுக்கு தைரியம் வரவழைக்க கயிற்றில்
கட்டி சுற்றி கிணற்றில் இறக்கி விடுகிறார்கள். சிறிது நேரம் கழித்து மேலே
தூக்கி பார்க்கும் போது, அவள் பருவமடைந்ததற்கான அறிகுறிகள் தெரிகின்றன. அதை
வைத்து முல்லா அவள் பெண் என அறிவிக்க, பதறிப்போகும் ஒசாமா ஓடுகிறாள்;
சிறுவர்கள் துரத்துகிறார்கள். ஒசாமா கைது செய்யப்பட்டு அவளுக்கு பர்தா
அணிவிக்கப்படுகிறது. அவள் சிறையில் அடைக்கப்படுகிறாள்.
மறுநாள்
விசாரணையில் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட ஒளிப்பதிவாளருக்கு மரண தண்டனை
விதிக்கப்பட்டு, சுட்டுக் கொல்லப்படுகிறார். மருத்துவமனையில் பிடிக்கப்பட்ட
வெளிநாட்டுப் பெண்ணை கழுத்தளவு தரையில் புதைத்து கல்லால் அடித்துக்
கொல்லும் தண்டனைக்கு ஆணாக வேடமிட்ட ஒசாமாவுக்கு தண்டனை வழங்கும் நேரம்
வருகிறது.
முல்லா சென்று பஞ்சாயத்துக்காரரின் காதில் ஏதோ
சொல்கிறார். அவரின் வேண்டுகோளுக்கிணங்கி, அந்தக் கிழட்டு முல்லாவுக்கு
ஒசாமா கட்டி வைக்கப்படுகிறாள். அம்மாவைத் தேடும் அவளின் அழுகையைக்
கவனியாமல் அழைத்துச் செல்லும் முல்லா தன் அந்தப்புரத்தில் உள்ள
மனைவிமார்களோடு அடைத்துவிடுகிறான்.
அவர்கள் தங்கள் சோகக்
கதையைப் பகிர்ந்து கொண்டவாறு கிழவனை சபித்தபடி ஒசாமாவை சிங்காரிக்கின்றனர்.
இரவானதும் கிழவர் வருகிறார். அறை அறையாய்த் தேடுகிறார். பதுங்கு
குழிக்குள் ஒளிந்திருப்பவளை எழுப்பி அவளுக்கு எந்தப் பூட்டு வேண்டுமென
பூட்டுகள் செய்து விடப்பட்ட சரமாலையைக் காட்டுகிறார். அதில் உனக்கு எதுவும்
பிடிக்கவில்லையா? என்றபடி பெரிய பூட்டு ஒன்றை எடுத்து உனக்காகவே இது என்று
காட்டுகிறார்.
ஒசாமாவை அழைத்துக் கொண்டு ஏணிப் படியேறி
மாடிக்கு செல்கிறார். மற்ற மனைவிகள் ஜன்னல் திறந்து பார்க்கின்றனர். கிழவர்
பெரிய கதவு வழியாக மாடியிலிருந்து வெளிப்பட்டு பால்கனியில் கொதிக்க
வைக்கப்பட்டிருக்கும் நீரில் அமர்ந்து தன்னை சுத்தம் செய்து கொள்கிறார்.
சிறைக் கம்பிகளின் சத்தமும் ஒசாமா ஸ்கிப்பிங் ஆடும் காட்சியும்
புலப்படுகிறது. படம் வலியைத் தந்தபடி நிறைவடைகிறது.
ஒசாமாவின்
குழந்தைத் தனத்துக்கு அவ்வப்போது அவள் ஆடும் ஸ்கிப்பிங்கைக் காட்டி, பின்
அதனையே துயரத்தை வெளிப் படுத்தும் கருவியாகவும் பயன்படுத்தியிருப்பது
இயக்குநரின் சிறப்பு. பெண்களை சிறையிலடைக்கும்போது வரும் கோழிகளின் சத்தம்,
பின்னணியில் சின்ன சின்ன இசை சேர்ப்புகளில் அதிர்வு என ஒளிப்பதிவுக்கு
இணையானது முகமது ரேஷா தர்வாஷியின் இசையும் ஒலிச் சேர்ப்பும்! கொண்டாட்ட
வீடு தாலிபான் வரவுக்காக சாவு வீட்டைப் போல் மாறுகிறது.
அவர்களின் அழுகைச் சத்தத்தோடு அடுத்து காட்சியின் குர்-ஆன் ஓதுதல்
தொடங்குகிறது. தான் பெற்ற அனுபவத்தைக் கொண்டு தன் முதல் முழு நீளப் படத்தை
எடுத்திருக்கும் இயக்குநர் சித்திக் பர்மக் தலிபான் ஆட்சியாளர்களால் நாடு
கடத்தப்பட்டவர். அவர்களின் ஆட்சி முடிந்ததற்குப் பிறகு வந்து 2003இல்
ஆப்கானிலேயே எடுத்த படம் ஒசாமா.
பார்வைகளிலேயே பயத்தைப்
பிரதிபலிக்கும் கண்கள் ஒசாமாவாக நடித்த மரினா கொல் பஹாரியினுடையது. அத்தனை
அர்த்தம் அந்தக் கண்களில். எஸ்பான்டியாக நடித்த ஆரிப் ஹெராட்டி, அம்மாவாக
நடித்த சுபைதா சாகர் அனைவரும் அற்புதமான ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளனர்.
பெண்
தன் மீது சுமத்தப்பட்ட உடை, அலங்காரம் உள்ளிட்டவற்றிலிருந்து வெளியேறி,
ஆணைப்போல வசதியாக வாழப் பழக வேண்டும் என்றார் தந்தை பெரியார். ஆனால்
கண்ணாடியில் படிந்த நீராவியில் சடையுடன் கூடிய சிறுமியை வரைந்து பார்க்கும்
ஒசாமாவின் மாற்றம் அவள் விரும்பி ஏற்றதல்ல. அவள் தாய் செய்ததும் ஆசைக்காக,
அலங்காரத்திற்காக அல்ல.
வாழ வழிதேடி பால் மாறிவேடமிட்டவளை
ஆணாதிக்கம் நிறைந்த மதம் நசுக்குகிறது. மீண்டும் பெரியார் சொன்னதுதான்:
எலிகளால் பூனைக்கு விடுதலை கிடைக்குமா? ஒருவேளை கிடைத்தாலும் ஆண்களால்
பெண்களுக்கு விடுதலை கிடைக்காது.
No comments:
Post a Comment